இந்தியாவின் பிரதி தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஸ்ரீ பங்கஜ் சரனுடன் உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட சந்திப்பு

இந்தியாவின் பிரதி தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஸ்ரீ பங்கஜ் சரனுடன் உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட சந்திப்பு

 இந்தியாவிற்கான இலங்கையின் உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட 2021 நவம்பர் 27ஆந் திகதி புது தில்லியில் உள்ள தேசிய பாதுகாப்பு சபை அலுவலகத்தில் வைத்து இந்தியாவின் பிரதி தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஸ்ரீ பங்கஜ் சரனை சந்தித்தார்.

உயர்ஸ்தானிகர் மொரகொடவை அன்புடன் வரவேற்ற பிரதி தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சரண், அவருடன் விரிவான கலந்துரையாடல்களில் ஈடுபட்டார். இந்தியாவின் பிரதி தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் இலங்கை உயர்ஸ்தானிகர் ஆகியோருக்கு இடையிலான கலந்துரையாடலின் போது, பொருளாதார ஒத்துழைப்புடன் தொடர்புடைய பரஸ்பர மூலோபாய நலன்கள் தொடர்பான பல்வேறு விடயங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.

உயர்ஸ்தானிகர் மொரகொட, 'இந்தியாவில் உள்ள இலங்கை இராஜதந்திரத் தூதரகங்களுக்கான ஒருங்கிணைந்த நாட்டு மூலோபாயம் 2021/2023' என்ற தனது கொள்கை வரைபடத்தின் பிரதியை பிரதி தேசிய பாதுகாப்பு ஆலோசகரிடம் வழங்கி வைத்தார்.

இந்திய வெளிநாட்டு சேவையின் உறுப்பினரான ஸ்ரீ பங்கஜ் சரண், மே 2018 இல் பிரதி தேசிய பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்படுவதற்கு முன்னர், ரஷ்யாவுக்கான இந்தியத் தூதுவராகவும், பங்களாதேஷிற்கான உயர்ஸ்தானிகராகவும் பணியாற்றினார்.

இலங்கை உயர்ஸ்தானிகராலயம்,

புது தில்லி

2021 நவம்பர் 29

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close