இணை ஊடக வெளியீடு  ஐரோப்பிய ஒன்றியம்- இலங்கை: ஆளுமை, சட்டத்தின் ஆட்சி மற்றும் மனித உரிமைகள் தொடர்பான பணிக்குழுவின் 8வது கூட்டம் கொழும்பில் நடைபெறுகிறது.

இணை ஊடக வெளியீடு  ஐரோப்பிய ஒன்றியம்- இலங்கை: ஆளுமை, சட்டத்தின் ஆட்சி மற்றும் மனித உரிமைகள் தொடர்பான பணிக்குழுவின் 8வது கூட்டம் கொழும்பில் நடைபெறுகிறது.

ஐரோப்பிய ஒன்றியம்-இலங்கை கூட்டு ஆணையத்தின் கீழ் ஆளுமை, சட்டத்தின் ஆட்சி மற்றும் மனித உரிமைகள் குறித்த பணிக்குழுவின் எட்டாவது கூட்டம், மே 05 அன்று கொழும்பில் நடைபெற்றது.

ஊழலை எதிர்த்துப் போராடுவதற்கான முயற்சிகள், தொழிலாளர் உரிமைகள் உள்ளிட்ட மனித உரிமைகளை நிலைநிறுத்துதல்; சிறுபான்மையைச் சேர்ந்த நபர்களின் உரிமைகள்; பெண்களின் உரிமைகள்; சிறுவர்களின் உரிமைகள்; சிவில் சமூகத்திற்கு உகந்த இட ஒழுங்கமைப்பு; தேர்தல் செயன்முறைகளை வலுப்படுத்துதல்; மற்றும் பாலினம் மற்றும் பாலியல் நோக்கை அடிப்படையாகக் கொண்ட பாகுபாட்டைத் தடுத்தல் உள்ளிட்ட பரஸ்பர ஆர்வமுள்ள பல்வேறு விடயங்கள் குறித்து பணிக்குழு ஆலோசித்தது.

கலந்துரையாடல்களின் போது, ​​கடந்த ஆண்டு நன்கு ஒழுங்கமைக்கப்பட்டதும், அமைதியாக நடத்தப்பட்டதுமான ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத் தேர்தல்கள் குறித்து, ஐரோப்பிய ஒன்றியம் இலங்கையை வாழ்த்திய அதேவேளை, இலங்கையும் ஜனாதிபதித் தேர்தலின் போதான ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்புப் பணியைப் பாராட்டியது.

பொருளாதாரத்தின் ஸ்திரத்தன்மை, மீட்சியை நோக்கிய தொடர்ச்சியான முயற்சிகள் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில் நிர்வாக சீர்திருத்தங்களை செயற்படுத்துவதற்கான அரசாங்கத்தின் செயற்திட்டம் போன்ற முக்கியமான முயற்சிகளுக்கு ஐரோப்பிய ஒன்றியம் இலங்கையை வாழ்த்தியது.  ஊழலை எதிர்த்துப் போராடுவதற்கான தேசியச் செயற்திட்டத்தை ஏற்றுக்கொள்வது மற்றும் இலஞ்சம் அல்லது ஊழல்கள் பற்றிய சாத்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவை (CIABOC) வலுப்படுத்துவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து இலங்கை ஐரோப்பிய ஒன்றியத்திற்கு விளக்கியது. ஐரோப்பிய ஒன்றியமும், இலங்கையும் சட்ட ஒழுங்கை வலுப்படுத்துவதற்கான நிர்வாகம் மற்றும் நீதித்துறைசார் செயன்முறைகளின் முக்கியத்துவத்தை ஒப்புக்கொண்டன. ஜனநாயக செயன்முறை, நிர்வாகம், சட்டத்தின் ஒழுங்கு மற்றும் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், ஊக்குவிப்பதற்கும், சட்ட கட்டமைப்பை வலுப்படுத்த இவ்வரசாங்கம் ஆட்சிக்கு வந்ததிலிருந்து எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து இலங்கை தரப்பு ஐரோப்பிய ஒன்றியத்திற்கு விளக்கியது. குறிப்பாக ஜனநாயக சமூகங்களுக்குள் சகல அம்சங்களையும் உள்ளடக்கியதும், ஆலோசனை ரீதியிலான சட்ட செயன்முறைகளை பேணுவதிலுமான சிவில் சமூக அமைப்புகளின் முக்கிய பங்கை, அவர்கள் ஒப்புக்கொண்டனர்.

மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கும், பாதுகாப்பதற்கும், சர்வதேச மனித உரிமைகள் கருவிகளை திறம்பட செயற்படுத்துவதில் பொருந்தக்கூடிய வகையில் ஒத்துழைப்பதற்கும் அதன் பகிரப்பட்ட உறுதிப்பாட்டை பணிக்குழு மீண்டும் வலியுறுத்தியது. பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை (PTA) இரத்துச்  செய்வதற்கான உறுதிப்பாட்டை இலங்கை வலியுறுத்தியதுடன், சர்வதேச விதிமுறைகள் மற்றும் தரநிலைகளுக்கு இணங்க புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தால் அதை மாற்றுவதற்கான கால எல்லை குறித்து பணிக்குழுவிற்கு விளக்கியது. GSP+ வர்த்தக விருப்புத்தேர்வுகள் மூலம் ஐரோப்பிய சந்தைக்கு தொடர்ச்சியான அணுகலை உறுதி செய்வதற்காக, சர்வதேச மனித உரிமைகள் மற்றும் சார்வதேச தொழிலாளர் அமைப்பின் (ILO) மரபுகளுக்கு ஏற்ப பொருத்தமான சட்டத்தைக் கொண்டுவர வேண்டியதன் அவசியத்தை ஐரோப்பிய ஒன்றியம் நினைவு கூர்ந்தது.

இனவாதத்தை முடிவுக்குக் கொண்டு வந்து தேசிய ஒற்றுமையைக் கட்டியெழுப்புவதற்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டையும், அனைத்து சமூகங்களையும் உள்ளடக்கிய மற்றும் பங்கேற்பு செயன்முறை மூலம் இலங்கையில் உண்மை மற்றும் நல்லிணக்க கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கான உறுதிமொழியையும் ஐரோப்பிய ஒன்றியம் வரவேற்றது.

ஐரோப்பிய ஒன்றியமும், இலங்கையும், ஐக்கிய நாடுகள் சபையின் பல்தரப்பு கட்டமைப்பில் தொடர்ந்து பணியாற்றுவதற்கும், மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகர் அலுவலகம் மற்றும் மனித உரிமைகள் மன்றத்துடனான தங்கள் ஈடுபாட்டைத் தொடர்வதற்கும், தங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினர்.

ஐரோப்பிய ஒன்றியமும் இலங்கையும், ஐக்கிய நாடுகள் சபையை மையமாகக் கொண்டு, சர்வதேச சட்டத்தை அடிப்படையாகக் கொண்ட பல்தரப்பு, விதிகள் அடிப்படையிலான சர்வதேச ஒழுங்கை தொடர்ந்து ஆதரிப்பதற்கான தங்கள் பகிரப்பட்ட உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தின.

...................................................
Video can be downloaded through the following link:

 

Please follow and like us:

Close